ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தினந்தோறும் கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த வாய்க்கால் நீர் திருப்பூர், கரூர் மாவட்ட எல்லை வரை 124 கிமீ தூரம் பயணிக்கிறது.
இந்நிலையில், உக்கரம் அருகே மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள தண்ணீர் தாழ்வான பகுதிகளான மேட்டுக்கடை,கேத்தம்பாளையம், சின்னபீளமேடு, மல்லநாயக்கனூர், குள்ளப்பாளையம் வழியாக அரசூர் பள்ளத்தைச் சென்றடைந்தது.
மூன்று கிலோமீட்டர் தூரம் வாய்க்கால் நீர் வேகமாகச் சென்றதால், திடீரென வந்த வெள்ளத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது, கேத்தம்பாளையத்தில் 27 வீடுகளுக்குள் வாய்க்கால் நீர் புகுந்தது. அங்கு கட்டியிருந்த ஆடுகள், மாடுகள், இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாகரணையிலும் நீர் புகுந்ததால் குடியிருப்புகள் சேதமடைந்தன. வாய்க்கால் உடைப்பால் வேகமாக சென்ற வாய்க்கால் நீர் மூன்று கிமீ தூரத்துக்கு பயிரிட்ட கரும்பு, நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயார்நிலையில் இருந்து பயிர்கள் சேதத்தின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாய்க்கால் கரை உடைப்பால் பாதிக்கப்பட்ட மக்களை வருவாய், தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு உக்கரம் பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் நாகரணை மண்டபம் ஆகியவற்றில் தங்கவைத்துள்ளனர். மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்கப்பட்டன. நீரில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
பெரும்பாலன இடங்களில் வெள்ளநீர் வடிந்துள்ளதால் பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடைப்பு ஏற்பட்டுள்ள வாய்க்கால் கரையை மணல் மூட்டைகள் போட்டும் கான்கிரீட் கரையமைத்தும் கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேரிடர் காலங்களில் மீட்புப் பணி குறித்து மீனவ மக்களுக்கு பயிற்சி!