ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது ஈசப்பாறை கிராமம். இக்கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பேனர் அடித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அந்தியூர் ஜீவா செட் தொடங்கி, அண்ணமார் பாளையம், செட்டியார் ஏரி, ஈசப்பாறை, முனியப்பன் கோயில் வழியாக மலைகருப்புசாமி கோவில் வரை செல்லும் தார்ச் சாலையானது சுமார் 6.4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
இந்த தார்ச் சாலை அமைத்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தற்போது வரை இந்தச் சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
எனவே, இந்த சாலையை செப்பனிடக் கோரி அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்து, பேனர் அடித்து அதனை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளோம். எங்களுக்கு சாலையை சரி செய்து கொடுக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேனர் கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை, நடத்தி பேனரை அகற்றினர். உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து, அதனைப் பேனர் அடித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியது அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: