ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வாழைத்தார்கள் விற்பனைகாக கொண்டு வரப்படுவது வழக்கம்.
அதேபோல், நேற்று வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பவானிசாகர், ராஜன்நகர், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5 ஆயிரம் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சேலம், தருமபுரி, பழனி பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதில் கதளி, நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, பூவன், ரொபஸ்டா, ஆந்திர ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட 5 ஆயிரம் வாழைத்தார்கள் ரூ. 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுச் செல்வதற்காக லாரியில் வாழைத்தார்கள் ஏற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதையும் படிங்க: விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை - மயில்சாமி அண்ணாதுரை