ஈரோடு: சத்தியமங்கலம் சாலையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மருத்துவமனையில், முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மருத்துவமனையில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக ஸ்கேன் மையம் இயங்கி வந்ததும், நோயாளி ஒருவரின் புகாருக்கு பின் தாமதமாக உரிமம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, முறைகேடாக இயங்கிய ஸ்கேன் மையத்திற்குச் சீல் வைத்த அதிகாரிகள், இது குறித்து 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த மருத்துவமனையின் கிளைகள் மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பங்களாதேஷ், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. பிரபல மருத்துவமனையில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஸ்கேன் மையம் சட்ட விரோதமாக இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.