ஈரோடு: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள அவரின் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில், அதன் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிர்வாகத்திறன்களை எளிதாகவும், வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக மேற்கொள்ளவும், முன்னேற்றப் பாதையில் மக்களை அழைத்துச் செல்லவும் சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். அதிலும் கொங்குநாடு என்ற கோரிக்கை இந்து மக்கள் கட்சியின் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.
அறிவித்திடுக கொங்கு மாநிலம்!
இந்தக் கோரிக்கை வெகு விரைவில் நிறைவேறிட வேண்டும். தமிழ்நாட்டில் எல்லாவிதமான வளர்ச்சித் திட்டங்களும், தொழில் சார்ந்த திட்டங்கள், கல்வி, நீதி, சட்டம் தேவையெனில் சென்னைக்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக தென் மாவட்டங்களாக இருந்தாலும் கொங்கு மண்டலமாக இருந்தாலும் வளர்ச்சிப் பெறவில்லை.
குறிப்பாக கொங்கு மாநிலம் இப்பகுதியில் அமைந்தால், நிச்சயமாக இப்பகுதி இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியாக வளர்ச்சி முறையில் வலுசேர்க்கும். எனவே கொங்கு மாநிலமாக அறிவித்திட வேண்டும். அதேபோல தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புத் திட்டங்கள், வேளாண் திட்டங்கள் என எதுவுமே தமிழ்நாடு அரசு செய்யவில்லை, தென் மாவட்டங்களையெல்லாம் ஒருங்கிணைத்து தென் மாநிலமாக உருவாக்க வேண்டும்.
உழவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
அவ்வாறு மூன்று சிறிய மாநிலங்கள் பிரிக்கப்படும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும், அந்த மாநிலங்கள் சிறந்து விளங்கும் என்பதுடன் இதனை அரசியலாகப் பார்க்காமல் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும்" என்றார்.
மேகதாது குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், "மேகதாது விவகாரத்தைப் பொறுத்தவரை கர்நாடக சட்டப்பேரவையில், அம்மாநில அரசின் ஒப்புதலோடு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. கர்நாடகாவில் அரசியல் காரணங்களுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரம் அங்கே கையாளப்படுகிறது.
தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கடைமடையில் உள்ள உழவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், டெல்டா மாவட்டங்களில் உழவர்களின் நலனைப் பாதுகாக்கும்பொருட்டும் தஞ்சையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை (ஆகஸ்ட் 4) உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தவுள்ளார்.
மோடி இருக்கும்வரை...
கர்நாடகாவிலுள்ள முதலமைச்சர் அரசியலுக்காக மேகதாதுவில் அணை கட்டப்போவதாகப் பேசிவருகிறார், மத்தியில் நரேந்திர மோடி அரசு இருக்கும்வரை அணை கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை" என்றார் அழுத்தமாக.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது - நடிகர் கமல்