ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் காய்கறி, பழங்கள், உணவு வகைகள் மற்றும் பூ வியாபாரம் செய்து வரும் 127 சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான விற்பனை வண்டிகளை, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் வழங்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 40 சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 40 சாலையோர வியாபாரிகளுக்கு வண்டிகளை வழங்கினார்.
அப்போது 10 காய்கறி வண்டி விற்பனை வியாபாரிகள், 10 பழ விற்பனை வண்டி வியாபாரிகள், 5 உணவு வகைகள் விற்பனை வண்டி வியாபாரிகள், 15 பூ விற்பனை வண்டி வியாபாரிகள் ஆகிய 40 சாலையோர வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கபட்டன.
இதனைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் சேவை மையத்தை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, 'கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாயிகளே இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். இரு பிரிவு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, யாரும் பாதிக்கப்படாமல் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.
மக்கள் பணியை 24 மணிநேரமும் செய்து வருகிறோம். மாதம் ஒரு முறை அனைத்து அமைச்சர்களிடமும் முதலமைச்சர், நாங்கள் செய்த பணிகள் குறித்து விளக்கம் கேட்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் கொடுக்கும் போது பார்க்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'அடுத்த வாரம் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்' எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - ஓபிஎஸ் கண்டனம்!