சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் கல்லூரி, ஈரோடு மாவட்ட புற்றுநோய் மருத்துவர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆனந்த் பாபு கலந்துகொண்டார்.
மாரத்தான் போட்டிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 1 ½ , 5 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் மாரத்தான் போட்டியின்போது புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகவுள்ள போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, புற்றுநோய்க்கு காரணமாகவுள்ள உணவுவகைகளைத் தவிர்க்க வேண்டும் போன்ற துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது பெண்கள் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் உலக மகளிர் தினத்தன்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட மாரத்தானில், குறைவான நேரத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஆனந்த் பாபு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக மகளிர் தினம்: கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி அறிமுக விழா