ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, கூலித்தொழிலாளியான பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரங்கநாதபுரம் என்ற பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நிலம் ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
கிணற்றில் விழுந்த பழனிச்சாமி, கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு சத்தமிட்டு உள்ளார். ஆனால், ஆள் நடமாட்டடம் இல்லாத பகுதி என்பதால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
இதனால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) முதல் இன்று (ஜூலை 26) வரை மூன்று நாட்களாக கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளார். இதற்கு இடையே பழனிச்சாமியின் உறவினர்கள், பல இடங்களிலும் பழனிச்சாமியை தேடி உள்ளனர்.
இதையும் படிங்க: கண் பார்வையின்றி கனவுகளை சுமக்கும் குழந்தைகள்; வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க அரசுக்கு கோரிக்கை!
இந்த நிலையில் கிணற்றின் அருகே சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்கவே கிணற்றுக்குள் பார்த்து உள்ளனர். இதனை அடுத்து பழனிச்சாமி கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நம்பியூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்குப் போராடிய பழனிச்சாமியை கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட பழனிச்சாமியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 65 வயதான முதியவர் மூன்று நாட்களாக கிணற்றுக்குள் கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடிய சம்பவம் இந்தப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு கொலை மிரட்டல் - குடும்பத்தினர் மீது போலீசில் புகார்!