தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்ற நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோன்று திமுக தலைவர் ஸ்டாலின் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் தனது பங்கிற்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஈரோடு புறநகர் மாவட்ட அமமுகவினர் சத்தியமங்கலம் பகுதியில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் தீவிரமடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலை போன்று அல்லாமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நிகராக வெற்றி பெற முனைப்புடன் அக்கட்சியினர் செயல்பட்டுவருகிறார்கள்.
![சத்தியமங்கலத்தில் அமமுக சுவர் விளம்பரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-sathy-painting-photo-tn10009_05012021085116_0501f_1609816876_277.jpg)
அண்மையில் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதால், சுவர் விளம்பரங்களில் குக்கர் சின்னம் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நாளை ( ஜன.6) சத்தியமங்கலத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் செல்லும் சாலையோர சுவர்களில் அமமுகவினர் சுவர் விளம்பரம் இடம்பெற்றிருப்பது அதிமுகவினரை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு