ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் தாய்மார்களுக்கு 1.50 லட்சம் ஆடுகள், கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே கால்நடை துறையை பொறுத்தவரையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதற்கு சான்றாக சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பூங்கா விளங்குகிறது என்றார். தமிழ்நாட்டிலேயே அதிகமாக ஈரோடு மாவட்டத்தில் தான் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா ஆம்புலன்ஸ் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் அதிகப்படுத்தப்படும்" என்றார்.