ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள வேலப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் ஊரடங்கு உத்தரவினால் 45 நாள்களுக்கும் மேலாக மதுபானங்களை அருந்தாமல் இருந்துவந்தார். அரசு மதுபானக் கடைகள் திறக்க உத்தரவிட்ட நிலையில், நேற்று இரண்டு மணி நேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிய அவர் தனது நண்பர்களுடன் வழக்கத்தை விட அதிகமான அளவு அருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது வழியில் இருந்த தோட்டக் கிணற்றில் இறங்கி குளிக்கச் சென்ற அவரால் நீந்த முடியாமல் சில நிமிடங்களிலேயே தண்ணீரில் மூழ்கினார்.
சக்திவேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் கிணற்றில் குளிக்கச் சென்றதும், கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்ததும் கண்டுள்ளனர்.
பின்னர், இதுதொடர்பாக மலையம்பாளையம் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
கிணற்றில் உள்ள தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றி, சகதியில் சிக்கியிருந்த சக்திவேலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து இவரது சடலம் உடற்கூறாய்விற்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 'ஐயா... முதலமைச்சரால் மதுபானம் கிடைச்சிருச்சு' - டாஸ்மாக்கில் ஆடிப்பாடி கொண்டாடிய தாத்தா