ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்களில் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. இதேபோல் திமுகவும் அதன் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டது.
ஆனால், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலத்தால், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கே.சி. கருப்பணனின் ஆதரவாளர்களுக்கு ஓர் இடத்தில் கூட சீட்டு வழங்கவில்லை. ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி. கருப்பணன் தனது ஆதரவாளர்களுக்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு இடங்களில் போட்டியிட கட்சி தலைமையிடம் கேட்டு வாய்ப்பு வழங்கினார்.
தோப்பு வெங்கடாசலம் இதனை ஏற்க மறுத்ததால் கே.சி.கருப்பணனின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். பெருந்துறை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடத்தை அதிமுக கைப்பற்றியது. ஆனால், 12 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுகவுக்கு 5 இடங்கள் தான் கிடைத்தது.
திமுகவுக்கு 3 இடங்களும் கே.சி. கருப்பணனின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றிபெற்றனர். இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயக்குமார், விஜயலட்சுமி, ஹேமலதா, சண்முகப்பிரியா ஆகியோருக்கு திமுக ஆதரவு அளிப்பதாக மறைமுக தேர்தலுக்கு முன்புவரை கூறிவந்தது.
இதனால் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதிவு சுயேட்சை உறுப்பினருக்கு அளிப்பதாகவும், துணை தலைவர் பதவி திமுகவுக்கு அளிப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மறைமுக தேர்தலன்று நள்ளிரவில் மீண்டும் திமுக தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகின்றது.
அதிர்ச்சியடைந்த அமைச்சர் கே.சி. கருப்பணனின் ஆதரவு உறுப்பினர்கள், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் திமுகவுக்கு வழங்குவதாகவும், துணை தலைவர் பதவியை சுயேட்சைக்கு அளித்துவிடலாம் என்றும் நள்ளிரவு வரையிலும் மீண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த திமுக தரப்பினர் கடைசி நேரத்தில் தாங்கள் நடுநிலையாக இருக்கபோவதாக தங்களின் முடிவை அறிவித்துள்ளனர்.
திமுகவின் இந்த திடீர் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக மாறியதை தொடர்ந்து, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவராக 7ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த சாந்தி தலைவராகவும், நான்காவது வார்டில் போட்டியிட்ட உமாமகேஸ்வரன் துணை தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
திமுகவின் இந்த திடீர் மாற்றத்துக்கு பல கோடி ரூபாய் கைமாறியதுதான் காரணமா? அல்லது பெருந்துறை எம்.எல்.ஏ.வின் ராஜ தந்திரமா என்று பெருந்துறை மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் மோதல் எதிரொலி : ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்