ஈரோடு: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப் 8) காலை தொழில் முனைவோர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் பிற்பகலில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலத்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றனர். ஆலோசனைக்குப் பின்னர் வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேட்டியளித்தார். அப்போது இடைத்தேர்தல் குறித்து ஆலோசனைகள் சொல்லப்பட்டது எனத் தெரிவித்தார். அவரிடம் ஓபிஎஸ் அணி கலந்துகொள்வார்களா என்ற கேள்விக்கு, தேவையில்லாத கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது எனப் பதில் அளித்துவிட்டுக் கிளம்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இடைத்தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் எத்தனை பேர் ஈரோட்டில் முகாமிட்டாலும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் முனுசாமி பேசுகையில், பிப்ரவரி 9 கட்டாயம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகின்றது எனவும், கூட்டணிக் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு, கூட்டணிக் கட்சி பற்றித்தான் கேட்டீர்கள், கூட்டணிக் கட்சிகள் கலந்த கொள்ளும் எனப் பதில் அளித்தார். அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டியளித்த போது, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகப்பிரகாசமாக இருக்கின்றது எனவும், பரப்புரை குறித்து தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனவும், அதிமுக மனமுவந்து நல்லெண்ணத்துடன் கொடுக்கும் அனைத்து ஆதரவையும் ஏற்றுக் கொள்ளும் எனவும், கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை வீழ்த்த அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், ஒன்றரை வருடமாக திமுக எதுவுமே செய்யாமல் மக்களுக்கு நாமம் போட்டு இருக்கின்றனர் என்றும், மக்கள் கேள்வி கேட்க தயாராக இருக்கின்றனர், திமுகவினர் வரட்டும் என காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை நிறைவடைந்த பின்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வில்லரசன்பட்டி நான்கு ரோடு பகுதியில் உள்ள பேக்கரிக்கு தேநீர் சாப்பிட சென்றார். பேக்கரியில் மக்களுடன் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட பின் வெளியில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர் தென்னரசுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதையும் படிங்க: சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இ-காமர்ஸ் இணையதளம் துவக்கம்!