ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பண்ணாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், "பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பசியில்லாமல் செல்ல, அவர்களின் பசியினை போக்குவதற்கு, அரசிடம் நிதி இருக்கிறதோ, இல்லையோ, பரவாயில்லை என மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தோம். திமுகவினர் நாங்கள் ரூ.1,000 வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என கூறுகின்றனர்.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து இருந்தால், ரூ.1,500 வழங்கி இருப்போம். நாங்கள் வெற்றி பெறவில்லை, ஆட்சி அமைக்கவில்லை, அமைத்து இருந்தால் 1,500 ரூபாய் நீங்கள் மறந்துவிடக் கூடாது. நான் கேட்கிறேன், தாலிக்கு தங்கம் எங்கே? மாணவர்களுக்கு மடிக்கணினி எங்கே? கொடுக்கப்படுகிறதா.
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆடு, மாடு வழங்கினோமே, இன்று வழங்கப்படுகிறதா?. மிக்சி, கிரைண்டர் வழங்கினோமே, வழங்கப்படுகிறதா?. ஆனால் இன்று ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு அதுவும் பாதி நபருக்கு தான் கிடைத்துள்ளது, பாதி பேருக்கு கிடைக்கவில்லை. அதிமுக அத்தனை பேருக்கும் கொடுப்போம் எனக் கூறினோம். அனைத்து அட்டைதாரருக்கும் கொடுப்போம்.
நாங்கள் சொன்ன வாக்கை நிறைவேற்றிக் காட்டுவோர். ஏனென்றால் நாங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் வந்தவர்கள். தேர்தல் வாக்குறிதி வேறு, ஆனால் இன்று நடப்பது வேறு. கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள். இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டின் வரலாற்றின் எல்லோரின் ஆட்சியும் இதுதான்.
ஆட்சி வருகிற போது கஜானா காலியாகத் தான் இருக்கும். ஆனால் ஆட்சி முடியும் போதும், தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிய வரலாறு படைத்தவர் அம்மா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. காவேரி விவகாரத்தில், டெல்லி போகிறார்கள் வருகிறார்கள். கர்நாடகத்தில் ஆளுங்கட்சி அவர்களது கூட்டணி கட்சி தான்.
தண்ணீரை கேட்க முடியவில்லை, பெற முடியவில்லை தவிக்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில் (1978) வறட்சி வருகிறபோது, தண்ணீரை திறந்துவிட்டால் மட்டும் தான் எம்.ஜி.ஆர் தண்ணீரைக் குடிப்பேன் என்றார். ஆகையால் தண்ணீரை திறந்துவிட்டேன் என முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குண்டுராவ் தெரிவித்தார். நதி நீர் போரட்டத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா அனைவரும் ஆற்றல் மிக்க சக்திகளாக இருந்த காரணத்தினால் தான் அன்றைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சம்பா மகசூல் பாதிப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!