ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஜெலட்டி ஆதிகருவண்ணராயர், பொம்மாதேவி கோயில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி பெளர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. உப்பிலியர் சமூக மக்களின் குலதெய்வமாக கருதப்படும் இக்கோயிலில் கிடா பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழ்நாட்டிலிருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய பகுதி என்பதாலும் மாவோயிஸ்ட்கள் ஊடுருவலைத் தடுப்பதற்கும், கோடை காலம் என்பதால் நடுக்காட்டில் தீ மூட்டக்கூடாது, கேஸ் அடுப்பில் மட்டுமே சமைக்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது போன்ற கடும் கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
இது குறித்து பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் கூறுகையில், 'பவானிசாகர் அடுத்த கருவண்ணராயர் கோயில் திருவிழா அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெறுவதால் வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று இரவு காட்டுப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.