பழனியில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) அதுல்ய மிஸ்ரா தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, சார் ஆட்சியர், வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், ஓய்வுதியம், நிலம் எடுப்பு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் ஏற்படக்கூடிய கால தாமதம் குறித்தும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் அதுல்ய மிஸ்ரா ஆலோசனையில் ஈடுபட்டார்.
வருவாய்த் துறையில் பணிகளை விரைவாக முடிக்க புதிதாக வரக்கூடிய பணியாளர்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வருவாய்த் துறையை அணுகும்போது அவர்களுடைய வேலைகளை காலதாமதமின்றி முடித்துக் கொடுக்க வேண்டுமெனவும் அதுல்ய மிஸ்ரா அறிவுறுத்தினார்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு நிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கக் கூடிய ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அந்த இடங்களை அதுல்ய மிஸ்ரா பார்வையிட்டார்.
மேலும் பழனி பெரியம்மாபட்டி கிராமத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பார்வையிட்ட அதுல்ய மிஸ்ரா ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நிலங்களைப் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.
இதையும் படிங்க...'முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரமாண்ட பாராட்டு விழா; லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு!'