ஈரோடு: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதிக்கான விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இதன் பின்பு நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதன் பின்பு மக்கள் செய்து தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்தது உழவர் சந்தை திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இடைத்தரவுகள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். பின்னர் வந்த அரசு இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தது ஆனால் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பின் காரணமாக இந்த திட்டத்தை தடுக்க முடியவில்லை என்று கூறினார்.
இதன் பின்பு பேசிய வேளாண்துறை அமைச்சர், 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த உழவர் சந்தை திட்டம் தற்போது திமுக அரசு மேலும் விரிவுபடுத்தி உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உழவர் உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பின்னர் செல்வம், கடந்த அதிமுக ஆட்சியில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,750 ரூபாய் கொடுக்க முடியாமல் தடுமாறியது. ஆனால் தற்போது வந்த திமுக அரசு ஆட்சி அமைந்த உடன் ஒரே ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 150 ரூபாய் சேர்த்து 2,950 வரையில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் கொடுக்காமல் இருந்த கரும்புக்கான நிலுவைத் தொகையை தற்போது வந்துள்ள திமுக அரசு பெற்றுத் தந்துள்ளது. கடந்த மாதத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே தற்போது வழங்கப்பட வேண்டி உள்ளது. தேர்தல் வாக்குறுதியின் படி நெல்லுக்கு கூடுதலாக குவிண்டாலுக்கு 50 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை பொதுவெளியில் கொட்டி வைக்காமல் வேளாண் துறை குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உடனுக்குடன் அறுவடை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முன்கூட்டியே ஜூன் 12 க்கு முன்பாகவே திறந்து இந்த ஆண்டு கூடுதலாக 25,000 ஏக்கர் நெல் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 26 மணிநேர நீண்ட தூரப்பயணம்... சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸில் சென்னை வந்த மூதாட்டி!