ஈரோடு: பவானியை அடுத்துள்ள காடையாம் பட்டியில் இட்லி உண்ணும் திருவிழா நடைபெற்றது. உடலுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காத இட்லியை பொதுமக்கள் விரும்பி சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில், பட்டையா கேட்டரிங் நிர்வாகத்தினர் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகைச்சுவை நடிகர் வையாபுரி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் கலந்துகொள்பவர்கள் முதல் 10 நிமிடங்களில் அதிகமான இட்லியை சாப்பிட வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு வாந்தி எடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது. 19-30 வயது, 31-40 வயது, 41-50 வயது என வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 25 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று வேகமாக இட்லியை சாப்பிட்டனர்.
இட்லி சாப்பிடும் போட்டி
இதில் அதிக இட்லி சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், நான்காவது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
ரூ.5 ஆயிரம் பரிசு
31-40 வயதினர் பிரிவில் குமார பாளையத்தை சேர்ந்த ரவி, 41-50 வயதினர் பிரிவில் பவானியை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோர் 3 நிமிடத்தில் தலா 19 இட்லியை சாப்பிட்டு முதல் பரிசை வென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் கலந்துகொண்டு இயற்கை உணவுகளை உண்ண வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை: மீண்டும் வருகிறது கனமழை