ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ருட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடுவது வழக்கம். தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, ச்ட்எரகனஹள்ளி, திகினாரை, பனஹள்ளி, தமிழ்புரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் தக்காளிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மார்ச் மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ 3 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
இதன் காரணமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அவற்றை பறிப்பதற்கான கூலி கொடுப்பதற்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கர் தக்காளி பயிரிட ரூபாய் 60 ஆயிரம் வரை செலவாகும். இந்நிலையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.