ஈரோடு: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சைலேந்தர் மற்றும் அதுலேஷ் ஆகிய இருவரும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு சூளை பகுதியில் உள்ள மதுபானக் கடையில் புலம்பெயர் தொழிலாளர்களான சைலேந்தர் மற்றும் அதுலேஸ் ஆகிய இருவரிடமும், 8 பேர் கொண்ட கும்பல் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளது. பின்னர் இவர்களிடம் இருந்த செல்போனை பறித்த கும்பல், இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
உடனடியாக இது குறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் துறையினர், இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் மதுபானக் கடையில் குடிப்பதற்காக பணம் கேட்டு வடமாநிலத் தொழிலாளர்களை மிரட்டிய ஈரோட்டைச் சேர்ந்த மதன்குமார், சபரி, கண்ணன், ராஜ்குமார், சக்திவேல், சாகுல் அமீது மற்றும் நசீர் ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் ஒருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் நேற்று (மார்ச் 13) கோயம்புத்தூர் மாவட்டம் டவுன் ஹால் இடையர் வீதியில் வந்து கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் இது தொடர்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சூரிய பிரகாஷ், பிரகதீஸ்வரன், பிரகாஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். அதிலும் கைது செய்யப்பட்ட பிரகாஷ், தான் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அதற்கான ஆவணங்களும் அவருடைய செல்போனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கைது செய்யப்பட்டவர்களில் சூர்யா என்ற முருகன் என்பவரும் இந்து முன்னணி அமைப்பில் இருந்தவர் என காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வைத்து மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு மற்றும் காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும் கடந்த வாரம் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழர்கள் தாக்குவதாக பரப்பப்பட்ட வீடியோவால், தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி உண்டானது. பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேநேரம் பீகார் மாநில அரசால் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட ஆய்வுக்குழு, தமிழ்நாட்டில் வந்து ஆய்வு மேற்கொண்டு, அதற்கான ஆய்வறிக்கையை பீகார் அரசிடம் சமர்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை!