சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வன ஆராய்ச்சி மையம் சார்பில் வாய்க்கால் புதூர் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 400 செம்மரம் செடிகள் நடவுசெய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களை வளர்த்து வனத் துறையினருக்கு ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவுசெய்யப்பட்ட இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்துள்ளன.
மரம் காய்ந்த பிறகு மரத்தை வனத் துறை மட்டுமே வெட்டி அகற்றும். அப்போது மரம் வளர்ப்புக்குத் தேவையான கட்டணத்தை வனத் துறை வழங்கும். இந்நிலையில் வனத் துறைக்குத் தெரியாமல் 20 டன் அளவில் சுமார் 200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.
மரம் கடத்துவது குறித்து ஈரோடு வனப் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஈரோடு வனப் பாதுகாப்புப்படை உதவி பாதுகாவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வுசெய்தனர்.
அப்போது மூர்த்தி தோட்டத்தில் உள்ள அறையில் 4 டன் அளவுள்ள மரங்கள் வெட்டி விற்பனைக்கு தயாராக இருந்துள்ளன. இதையடுத்து வனத் துறை அனுமதியின்றி செம்மரங்களை வெட்டியது, கடத்தலுக்குத் தயாராக இருந்தது குறித்து விசாரிக்கப்பட்டு மரத்தை பறிமுதல்செய்தனர்.
மேலும் இது குறித்து தோட்டத்து மேலாளர் பாலமணி என்பவரிடம் வனத் துறை, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை எத்தனை டன் மரங்கள் விற்கப்பட்டன, எவருக்கு விற்கப்பட்டது, அதன் மதிப்பு என்ன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி, 2 மகன்களை கொலைசெய்த நகைக்கடை அதிபர் தற்கொலை முயற்சி