கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை ஈரோடு மாவட்டம், பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்படி, பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில், கோழி பள்ளத்திலிருந்து பருத்திக்கொட்டையை ஏற்றிய வந்த டெம்போ லாரியை சோதனையிட்டதில், அதன் உட்பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர்களான சுலைமான் சேட் மற்றும் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூ.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
ஒரு லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 56 மூட்டைகளில் போதைப் பொருளும், மற்றொரு லாரியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 43 மூட்டைகளில் போதைப் பொருளும் கடத்தியது தெரியவந்தது.
அதன்பின்னர், அந்த இரு டெம்போக்களும் அங்கிருந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.