ஈரோடு: மாணிக்கம்பாளையம், வக்கீல் தோட்டம் வீதியைச் சேர்ந்த தம்பதி ரெசீனா-சமீர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமீர் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள பூக்கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ரெசீனா இல்லத்தரசியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு லுக்மான் (17), ஹன்சிலா பாத்திமா (11), அர்சத் (7) என 3 குழந்தைகள் உள்ளனர. இந்தநிலையில், இவர்களது மூத்த மகன் லுக்மான் தசைநார் வலுவிழக்கும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
லுக்மான், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். சிறு வயதிலேயே அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட அவரை குணப்படுத்த பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்பு இது தசைநார் சிதைவு நோய் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லுக்மான் அவரது உடலை அசைக்க பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த சிகிச்சை முறையை மருத்துவர்கள் மூலமாக தாய் ரெசீனா கற்றுக்கொண்டு தினமும் லுக்மானுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இதுகுறித்து ரெசீனா கூறுகையில், "இந்த நோய்க்கான மருந்து நம் நாட்டில் இல்லை. மேலை நாடுகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லுக்மானுக்கு மருந்துகளைப் பெற ஆண்டுக்கு ரூ.60 லட்சம் தேவைப்படுகிறது. நாங்கள் வாடகை வீட்டில் தான் உள்ளோம். மிகவும் கஷ்டப்படுகிறோம். என் மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ வேண்டும். சக மனிதனாக எல்லோரையும் போல் அவன் வாழ அரசும், தமிழ்நாட்டு மக்களும் உதவ வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது - தமிழ்நாடு அரசு!