ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் சதீஸ்குமார்(16). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சதீஸ்குமார் தனது செல்போனில் பப்ஜி கேம்மினை, ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, நேற்று (மே 18) மாட்டுசந்தை திடலில் உட்கார்ந்து கேமினை விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அவரது நண்பர்கள், குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சதீஸ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மயக்கமுற்று இறந்துவிட்டதாகவும், அவரது இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என தெரியவந்தது.
இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!