சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இதன் வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இவ்வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நின்றுவிடுவதால் இருமாநிலப் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக 12 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பண்ணாரி வட்டாரப் போக்குவரத்து சோதனைச் சாவடியில் நேற்று (மார்ச்.23) நடந்த வாகன சோதனையின்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக வந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தடையை மீறி இயங்கிய லாரியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், லாரி கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்றதும், அதனை சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சுனில் பாகர் என்பவர் ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:’பழைய நோட்டுகளைப் போல் அதிமுகவை செல்லா நோட்டுகள் ஆக்குவோம்’ - உதயநிதி