ஈரோடு மாவட்டக் காவல் துறையினர் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் துறையினர், பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள காவலர் உணவகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆய்வினை மேற்கொண்டனர். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற 17ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோட்டிற்கு வருகைதந்து மாவட்டத்திலுள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு அரசுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், அன்றைய தினமே 10,12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதை முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார். அதே நாளில் இந்திய அளவில் முதன்முறையாக ஈ-பாஸ் நிறுவனத்தின் உதவியுடன் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது மடிகணினியில் ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்படுவதையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
மத்திய அரசு 30 விழுக்காடு பாடங்களைக் குறைப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்துவருவதால், 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழுவினரின் பரிந்துரையின்பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான முடிவுகளை அறிவிப்பார். மாணவ, மாணவியர்களுக்கு வீடு வீடாக பாடப்புத்தகங்கள் வழங்குவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதநேயம் கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் வீடு வீடாகச் சென்று புத்தகங்கள் வழங்குவது சாத்தியப்படும். கல்வித் தொலைக்காட்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் வாரியாக நடத்தப்படுவது கால அட்டவணைப்படி ஒளிப்பரப்பு செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பேசுவதும், அதனைச் சிந்திப்பதற்கும் இது நேரமில்லை" என்றார்.
இதையும் படிங்க: இன்பத்தமிழ்க் கருவூலம் நம் நாவலர் - மு.க.ஸ்டாலின் புகழாரம்