நாடு முழுவதும் கரோனா தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
எனினும், தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எந்தவிதமான தளர்வுகளும் இதுவரை இல்லாததால் தொடர் பணி சூழலினால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும் தற்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவேண்டி, திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 240 காவல்துறையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது யோகா பயிற்சி மூலம் நுரையீரல் மற்றும் இதயத்தை பாதுகாப்பதற்கு, மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், பாத ஆசனம், சக்கராசனம் உட்பட பல ஆசனங்களை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கண்டைனர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!