திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள நடுப்பட்டி, பள்ளத்துபட்டி, மன்றகால்வாய் ஆகியப் பகுதிகளில் கடந்த 2 வாரமாக நான்கு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த வாரம் மாரியம்மாள் என்ற பெண்ணை யானை மிதித்துக் கொன்றது. இந்த யானைகள் விரட்டியதில், கடந்த இரண்டு வாரங்களில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று காலை ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் வந்தது. அதனை வனத்துறையினர் வெடிவைத்து விரட்ட முயற்சித்தனர். வெடி சத்தம் கேட்டு மிரண்ட யானை அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரத்தினம், அவரது மனைவி சரஸ்வதி, ரத்தினத்தின் அக்கா ஜெயலட்சுமி ஆகியோரை யானைத் தாக்கியது.
இதில் காயமடைந்த மூவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களில் யானைத் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தும், ஐந்து பேர் படுகாயமும் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 65 வயது யானைக்கு ராணுவ பாதுகாப்பு... ஏன் தெரியுமா?