திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் உடன் பணிபுரிந்துவந்த திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அசோக்கும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில் இருவீட்டாரும் பேசி திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்து திருமணத்துக்கான தேதியும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று அசோக் குடும்பத்தார் திருமணத்திற்கு வரவில்லை. இதனையடுத்து அசோக்கின் சித்தி ஏற்பாட்டில் சேலத்தில் ரம்யாவுக்கும் அசோக்குக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
அசோக்கின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகக்கூறி அவரை சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அசோக் உடன் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அசோக்கின் குடும்பத்தார் அவரை மறைத்து வைத்துக்கொண்டு அனுப்பாமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
அசோக்கை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றபோது அவரது உறவினர்கள் ரம்யாவின் உறவினர்களை மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அசோக்கிற்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ரம்யாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தனது கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரம்யா புகார் கொடுத்துள்ளார். தனது கணவரை பிரித்து வேறு திருமணம் செய்துவைக்கும் எண்ணத்தில் செயல்படும் அவரது குடும்பத்தாரிடமிருந்து கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஒரே பெண்ணுடன் இருவருக்குத் தொடர்பு - இளைஞர் குத்திக்கொலை!