திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி நாகலட்சுமி, இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், வேல்முருகன் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இதனால் வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த நாகலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் பணி தாமதமாக முடிந்ததால் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நள்ளிரவில் வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்காமல் இருந்துள்ளார். அதன்பிறகு நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வழியாக தாமதமாக மனைவி கதவை திறந்துள்ளார். உள்ளே சென்ற வேல்முருகன் தனது ஆடைகளை மாற்றி உள்ளார். இந்நிலையில் கட்டிலுக்கு அடியில் ரமேஷ் என்பவர் மறைந்து இருந்ததைக் கண்டு வேல்முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், இருவரையும் தாக்கியும், இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நாகலட்சுமி வீட்டிற்குள் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் குஜிலியம்பாறை காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ரயில் மோதி இருவர் உயிரிழப்பு!