திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான கொடைக்கானல் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட கீழ் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவந்ததால், ஆத்தூர் காமராஜர் அணையில் நீர்வரத்து வர தொடங்கியது.
எனவே, அணையில் குறிப்பிட்ட நீர் இருப்பு சேகரித்த பிறகு, மலைகளிலிருந்து வரக்கூடிய நீர்வரத்து குடகனாறு ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்க வேண்டும் எனப் பல நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகமானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதற்கட்டமாக பங்கிட்டு நீரை திறந்துவிட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஆற்றங்கரையின் பூஜைகள் செய்து மலர்த்தூவி தண்ணீரை வணங்கி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து சிறுவர்கள் ஆற்றுநீரில் விளையாடத் தொடங்கினார். தங்களது பல நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் நீர் திறந்ததற்கு விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே அனுமந்தராயன் கோட்டை தாண்டியுள்ள தாமரைக் குளத்தில் நீர்த்தேக்க அனுமதிக்காமல் மதகு திறந்துவிடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பொன் மாந்துறை, மைலாப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நீரானது தேக்கப்படாமல் செல்வதால் விவசாயிகள் யாருக்கும் பயன் அளிக்காது என்று வேதனையாக கூறினர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு!