திண்டுக்கல்: பழனி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தி அடைந்த நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, "என்னை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை" என திண்டுக்கல் எம்பி, திண்டுக்கல் எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் வாகன போக்குவரத்து கூட்ட நெரிசலில் பல மணி நேரம் பரிதவிக்கின்றனர்.
பக்தர்களுக்கு போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக அனைத்துதுறை அதிகாரிகாளுடன் கலந்தாய்வு கூட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் நேற்று (செப். 8) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையிலும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலையிலும் அனைத்து துறை அதிகாரிகள், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, "பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, வாகனம் நிறுத்தும் இடம் இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். போக்குவரத்தை சீரமைப்பது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்து அதிகாரிகள் வெளியே வரும் பொழுது பழனி நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளருமான கந்தசாமி, அதிகாரிகளுடன் திமுக எம்பி முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"கூட்டம் தொடர்பாக ஏன் எனக்கு தகவல் சொல்லவில்லை,ரகசிய கூட்டம் நடைபெறுகிறதா, திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் விலகி இருக்கிறதா? முதல்வர் கையெழுத்து போட்டு தான் பதவிக்கு வந்துள்ளேன், அவமானப்படுத்துகிறீர்களா?" என பல்வேறு கேள்விகளை அடுக்ககாக வைத்ததார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் ரத்து! எம்.எச்.ஜவாஹிருல்லா முடிவின் காரணம் என்ன?