திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், "திமுக தொடர்ந்து இந்து மத நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்து மத வழிபாடுகளை கேலிசெய்வதை கொள்கையாக வைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மூன்று நாள்கள் மத வழிபாடுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.
விலையேற்றம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "சிறிது காலத்திற்கு விலையேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. கடந்த கால ஆட்சியின்போது சுமார் மூன்று லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது. அதனை மத்திய அரசு செலுத்திவருகிறது. கூடிய விரைவில் பெட்ரோல் விலை குறையும்.
எஸ்டிபிஐ, பி.எஃப்.ஐ., நாம் தமிழர் போன்றோர் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத சக்திகளாக மாற்றுகின்றனர். இதனைத் தடுக்கும்விதமாக பல்வேறு பரப்புரைகளில் ஈடுபடும்போது பாஜகவினர் தாக்கப்படுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை!