திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டி பகுதியில், மரத்தில் அமர்ந்திருந்த மயிலை நாட்டு துப்பாக்கியால் இரண்டு நபர்கள் சுட்டு வேட்டையாடியுள்ளனர். இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த இரண்டு பேர் வேட்டையாடிய மயிலை வெட்டி சமைக்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் விசாரணை செய்ததில் ஒருவர் விராலிப்பட்டியைச் சேர்ந்த ஞானசேகர்(50) என்றும், மற்றொருவர் பெயர் பவுல்ராஜ் (34) என்பதும் தெரியவந்தது. பிறகு வனத்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் வைத்திருந்த மயில் இறைச்சி, இறக்கைகள், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.