திண்டுக்கல்: தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில் திண்டுகல்லில் நேற்று (நவ. 3) மாலையில் வானம் திடீரென கரும் மேகத்துடன் காணப்பட்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி இரு வேறு இடங்களில் ஆண், பெண் என இருவர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (வயது 27). இவர் நேற்று மாட்டிற்கு தீவனம் அறுக்க சென்ற போது கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின் மீது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 35). இவர் கூலித் தொழிலாளி. நேற்று (நவ. 3) மாலை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது, இவர் தனது மாட்டை கட்டுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் மற்றும் நத்தம் அருகே உள்ள கோட்டையூர் பகுதிகளில் மாடுகளுக்கு தீவனங்கள் வைப்பதற்காக சென்ற பொழுது இரு வேறு இடங்களில் ஆண் மற்றும் பெண் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரை கைது செய்த என்ஐஏ.. பின்னணி என்ன?