சீன பொருள்கள் புறக்கணிப்பு, இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி, ஜூன் 5ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்திருந்தார். அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் சீனா, பாகிஸ்தான் தலைவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா, பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் பிரதமர்களின் புகைப்படங்களை எரிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.