திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராபட்டியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் புகழேந்தி (12). மதுரை மாவட்டம், அழகர்கோயில் அருகேயுள்ள வலையபட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் சக்திவேல் (10). இவர்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் சமுத்திராபட்டியிலுள்ள தாத்தா பொண்ணுச்சாமி வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகேயுள்ள உடையான் செட்டிகுளத்தில் குளிப்பதற்காக சிறுவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது, குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லாத காரணத்தினால் சிறுவர்கள் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சிறுவர்களது பெற்றோரும், ஊர்மக்களும் பல இடங்களில் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், குளத்தின் வழியாக வந்த சிலர் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இசம்பவம் குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் பள்ளி விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்கு வந்த பள்ளி சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்தவர் கைது