திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அதனைத் தடுக்கும் விதமாக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் காவல் சார்பு ஆய்வாளர்கள் சரவணக்குமார், விஜய், போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் நல்லசாமி ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை பள்ளி மாணவர்கள், மது அருந்திய நிலையில், ஓட்டி வருபவர்களிடம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள இ-சலான் இயந்திரம் மூலம் அபராதத் தொகையை வசூல் செய்கின்றனர்.
காவல் துறையினர் அபராத தொகையை கையில் பெறாமல் ஏடிஎம் கார்டு மூலம் வசூல் செய்வதால் நேரடியாக பணம் அரசிற்கு செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இ-சலான் முறை அபராத தொகை வசூலுக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.