கரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல ஆன்லைன் மூலம் இ-பாஸ் அனுமதி பெற்று சுற்றுலா செல்லலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வெளிமாவட்ட மக்கள் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு செல்லலாம். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும்" என அறிவித்திருந்தார். இதையடுத்து வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இ-பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் நுழைவுவாயில் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன.
பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கொத்துகள் வழங்கப்பட்டன. பிரையண்ட் பூங்காவிற்கு குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலாப் பயணிகள் வண்ண வண்ண மலர்களைக் கண்டும் ரசித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் கரோனா பரவலைத் தடுக்க பூங்காக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிந்து, தகுந்த இடைவெளி கடைபிடித்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு பூங்காவிலும் இரண்டு மணி நேரத்திற்கு 200 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.