திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் கரோனா சிதைத்து விட்டது.
இதனிடையை பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததின்படி, இ-பாஸ் பெற்றுக்கொண்டு கொடைக்கானல் வர அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, பூங்காக்கள் மட்டுமே கொடைக்கானலில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன்மரக்காடுகள், தூண் பாறை உள்ளிட்ட பல திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 5ஆம் கட்ட தளர்வுகளில் சுற்றுலா தளங்களுக்கு திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடரும் என்ற அறிவிப்பால், ஆவலோடு காத்திருந்த கொடைக்கானல் வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.