திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 8வது லீக் ஆட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, சீகம் மதுரை பேந்தர்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது.
முதல் ஓவரிலேயே ஓபனர் எஸ். கார்த்திக் 4 ரன்களில் சரவண குமாரின் வேகத்தில் ஆட்டமிழக்க, அதன் பின் 2வது விக்கெட்டிற்கு கேப்டன் ஹரி நிஷாந்த் மற்றும் கௌஷிக் இணைந்து நிதானமாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தனர். முக்கிய தருணத்தில் ஹரி நிஷாந்த் (24) ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக விளையாடி வந்த கௌஷிக் 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தியிடம் பறிகொடுத்தார்.
இந்தியக் கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் மீது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் வெறும் 12 ரன்களில் தனது விக்கெட்டை அஷ்வினிடம் பறிகொடுத்தார். மேலும் திண்டுக்கல் டிராகன்ஸின் சிறப்பான பந்துவீச்சில் சீகம் மதுரை பேந்தர்ஸின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
திண்டுக்கல் டிராகன்ஸைப் பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர்களான சுபோத் பாட்டீ மற்றும் சரவணகுமார் தலா 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த சீஸனில் அதிக விக்கெட்கள் எடுத்த பௌலர்களின் பட்டியலில் 5 விக்கெட்களுடன் சுபோத் பாட்டீ முதலிடம் பிடித்து பர்ப்பிள் கேப்பை தன் வசப்படுத்தியுள்ளார்.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சென்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஒப்பனர் ஷிவம் சிங் 9 ரன்களிலும், மற்றொரு ஒப்பனரான விமல் குமார் 6 ரன்களிலும் குர்ஜப்நீத் சிங்கின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்களை இழந்தனர். மேலும் குர்ஜப்நீத் சிங்கின் 3வது ஓவரில் எஸ் அருண் அடித்தப் பந்தை முருகன் அஷ்வின் மிகச்சிறப்பாக டைவடித்து கேட்ச் செய்ய திண்டுக்கல் டிராகன்ஸ் பவர் ப்ளேவிற்குள்ளாக 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்பு 4வது விக்கெட்டிற்கு பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் இணைந்து தங்களது அணியை சரிவிலிருந்து மீட்டு எடுத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதத்தைப் பூர்த்தி செய்தனர். இதன்மூலம் 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் (48 பந்துகள் 78* ரன்கள்) மற்றும் ஆதித்யா கணேஷ் (22 பந்துகள் 22* ரன்கள்) இணைந்து 92 ரன்கள் சேர்க்க, இறுதியில் 35 பந்துகள் மீதமுள்ள நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸை வீழ்த்தி இந்த சீஸனில் தொடர்ச்சியாக தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.