மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 58ஆவது மலர் கண்காட்சியை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களுக்காகவே பணியாற்றினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பயனடைந்துள்ளனர். அவரது வழியில் தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி செயல்படுகிறார்.
கொடைக்கானல் தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குவதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கோடை காலத்தில் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.
இதனால் கொடைக்கானலில் வாழ்வாதாரமே சுற்றுலாதான் என்ற நிலை நிலவுகிறது. தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மிகுந்த கோடை விழாவானது பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரியவகை பூக்கள், மலர் செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்றவை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.