திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேவுள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராதா (38). இவர், மேட்டுக்கடை அருகேவுள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக தனது 12 வயது மகள், பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி என்பவரின் 13 வயது மகள் ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார்.
மூவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆழம் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக குளத்தில் இறங்கி மூவரையும் மீட்க முயன்றனர். இருந்த போதிலும் மூவரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் கிராம மக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய மூவரையும் தேடினர். பல மணி நேரத் தேடலுக்கு பின்னர் மூவரது உடலையும் தீயணைப்புதுறை வீரர்கள் மீட்டனர்.
இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றை உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்த இளைஞர் - 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உடல் மீட்பு