திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தக் குடிநீர் தேக்கத்திலிருந்து கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், புதுக்காடு, செல்லபுரம், கீழ்பூமி, நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக குடிநீர்த் தேக்கத்தில் 13 அடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்தப் பகுதியிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தேக்கத்தில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையம் ஆனது பல வருடங்களாக செயல்படாமல் இருந்துவருகிறது. இங்கிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் தண்ணீரின் நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனைப் பருகும் பொதுமக்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்துவருகிறது. எனவே குடிநீர்த்தேக்கத்தில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரித்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கொடைக்கானல் நகராட்சிக்குப் பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.