திண்டுக்கல்: பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது, காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து கோவை பேசஞ்சர் ரயில் பழனிக்கு வந்தது. ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் ரயில்நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது தனியாக சிறுமி ஒருவர் நடைமேடையில் சுற்றித் திரிந்தாள்.
இதையடுத்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில், அவள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குரங்குத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ராமு(42) என்பவரின் மகள் என்பதும், 7-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. பள்ளிக்குச் செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி பழனிக்கு ரயிலில் வந்ததும் தெரியவந்தது. அந்தச் சிறுமி சோழவந்தான் ரயில்நிலையத்தில் இருந்து பழனிக்கு டிக்கெட் எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் உடனடியாக வாடிப்பட்டி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தங்களது மகள் பழனியில் இருப்பதாகத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராமு, உடனடினயாக பழனி ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே பழனி ரயில்வே போலீசார் பழனி 'சைல்டு லைன்' அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
'சைல்டு லைன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரியதுரை ரயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் சிறுமியிடம் அறிவுரை வழங்கினர். தொடர்ந்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அச்சிறுமி, அவரின் தந்தையான ராமுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: TNPL 2022: திண்டுக்கல்லை திண்டாடவைத்த திருச்சி - அஜய் கிருஷ்ணா அசத்தல்!