தூத்துக்குடி ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் போல்
பூல் பாண்டியன், தான் யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கலை சுற்றியுள்ள கோவில்களில் எடுத்த யாசகம் மூலம் கிடைத்த 10,000 ரூபாயை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பூல் பாண்டியன், கடந்த ஒரு மாத காலமாக மதுரையை சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்த யாசகத்தில் கிடைத்த ரூபாய் பத்தாயிரத்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூபாய் 50 லட்சத்தி 60 ஆயிரத்தை தமிழ்நாடு அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்காக வழங்கி உள்ளதாக செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வசதி படைத்த மக்கள் கூட இன்று பிறருக்கு உதவி செய்ய மறுக்கும் நிலையில் தூத்துக்குடி சேர்ந்த இந்த யாசகர் தனது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மீதமுள்ள பணத்தை பொதுமக்களுக்கு உதவும் வகையில் மனநிறைவோடு கொடுக்க வந்தது, மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்திருந்த பொது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு ரயில் இனி செங்கோட்டை வரை இயங்கும்