திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று வர தொடங்கியுள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூன்று பூங்காக்கள், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர். கரோனா தொற்றைக் தடுக்கும்விதமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதற்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சுகாதாரப் பிரிவில் தற்காலிக ஓட்டுநராக சமுத்திரம் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர் அரசு உத்தரவை மீறி நகராட்சிக்குச் சொந்தமான படகு குழாமிலிருந்து நான்கு பயணிகளை வைத்து ஏரியில் படகு சவாரி செய்துள்ளார்.
இதனை அறிந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் தடுத்தி நிறுத்தியுள்ளார். இதனைப் பற்றி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது, வரும் 19ஆம் தேதி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
தற்காலிகப் பணியாளர் தனது உறவினரை வைத்து படகு இயக்கினாரா? அல்லது நகராட்சி அலுவலர்களின் உறவினர்களை வைத்து இயக்கினாரா? என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்யாமல் ஏரியினை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு தடையை மீறி படகினை இயக்கியவர் மீது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்