திண்டுக்கல்லில் தனியார் வங்கி சார்பாக நடத்தப்பட்ட ரத்த தான முகாமை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘தொடர்ந்து ரத்த தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ரத்த தானத்தில் மட்டுமல்ல கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதிலும் நம் மாநிலம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மேலும், 15 ஆண்டுகள் செய்ய வேண்டிய விஷயத்தை ஒரே நேரத்தில் செய்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் ஒரே ஆண்டில் ஒரே நேரத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளோம். திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் திண்டுக்கல்லுக்கு ஒரு புதிய மருத்துவ கல்லூரியை ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பிலும் முதற்கட்டமாக ரூ. 137.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான டெண்டர் வரும் ஜனவரி 7ஆம் தேதி விடப்படும். திட்டமிட்டபடி 11 மாதங்களில் வேகமாக பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 150 இடங்களோடு திறக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக தோல்வி பயத்தில் உள்ளது” - பழனிசாமி