திண்டுக்கல்லில் தமிழ்நாடு பொது விநியோகம் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரத்து 646 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறோம். கரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதிமுதல் இலவசமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை. ரூ.1000 வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச பொருள்கள் வழங்கும்போது பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்களுக்கும், விநியோகம் செய்யும் எங்களுக்கும் கரோனா தொற்று தாக்க வாய்ப்புள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு அரசு அறிவித்துள்ளதை விநியோகம் செய்யலாம். இதையும் மீறி வழங்க வேண்டும் என வற்புறுத்தினால் நீதிமன்றம் செல்வோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா ஆபத்திலும் அயராது உழைக்கும் அலுவலர்கள்