திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவியர் கல்லூரி படிப்பை தொடர மதுரை அல்லது திண்டுக்கல் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கள் பகுதியிலேயே அரசு கலை கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கட்டமைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவியர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக் கல்வியைப் பயில முடிகிறது. ஆனால் அதன் பின்னர் 70 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் மட்டுமே கல்லூரிப் படிப்பை தொடரும் நிலையுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தங்களால் எப்படி இதுபோன்று பயணித்து கல்வி பயில முடியும்.
இதன் காரணமாக ஏராளமான மாணவ, மாணவியர் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கைவிடுகின்றனர். எனவே எங்களது வருங்கால கல்விக்கனவை கருத்தில் கொண்டு நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் பயிலும் வகையில் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தர வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: